கொரோனா நிவாரண உதவிகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அதிமுகவை சேர்ந்த தேவராஜ். இவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் மாநில முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி 7 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாய் அறிவித்து அதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த 15 ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பொது வெளியில் கூட கூடாது என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முந்தைய அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கிய போது அரசியல் கட்சியினர் அரசு வழக்கும் நிதியில் தலையீடுவது, நியாய விலை கடைகளில் பதாகை வைப்பது, நிவாரண நிதியை வழங்கும் போது கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும், ஆளும் கட்சியின் நிர்வாகிகள் இந்த நிகழ்வுகளில் எந்தவிதத்திலும் பங்கேற்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவு தற்போதும் அப்படியே உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தற்பொழுது கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறன்றனர். சென்னை ஆயிரம்விளக்கு, அண்ணா நகர் தொகுதிகளின் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் கட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகளையும் கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று நியாய விலை கடைகளில் நிவாரண தொகையை வழங்கு வருகின்றனர். ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தற்போது தமிழக சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இவர் திசையன்விளை, பணகுடி உள்ளிட்ட ஊர்களிலுள்ள நியாய விலை கடைகளுக்கு திமுக நிர்வாகிகளை பெருங்கூட்டமாக அழைத்துச் சென்று பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சபாநாயகர் அப்பாவுவை வரவேற்று திமுக சின்னம் கொடி பொறித்த பேனர்கள் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரம் திமுகவினரால் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் போதிய சமூக இடைவெளியின்றி ஆளும்கட்சியினர் சபாநாயகருடன் நின்றபடி கரோனா நிதி வழங்கி வருகின்றனர். கொரோனா நிதி வழங்கல் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவினையும் அப்பட்டமாக மீறியுள்ளார். எனவே சமூக இடைவெளி, அரசு நீதி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாம் இருக்க வேண்டும் நியாய விலை கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்க தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் மூன்றாம் தேதி முதல் அரிசி முதலான பொருட்களடங்கிய நிவாரண தொகுப்பு பை நியாயவிலை கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அவ்வாறு வழங்கும்போது பொதுமக்கள் நியாய விலை கடைகளில் அதிக அளவில் கூடி கொரோனா தொற்று மேலும் தமிழகத்தில் அதிக அளவில் பரவிடும் அபாயம் உள்ளது. ஆகவே உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும், இந்த நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதீமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா நிவாரண நிதி வழங்கும் போது விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவில்லை, நிவாரண நிதிக்காகன டோக்கன் வழங்கும் போது அரசியல் விழாவை போல ஆளும் கட்சியினர் செயல்படுகின்றனர். நிகழ்ச்சியில் பலர் மாஸ்க் அணியாமல் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஆளும் கட்சியிர் மதிக்காமல் உள்ளதாகவும் புகார் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், கொரோனா காலத்தில் கவனம் செலுத்த வேண்டிய விசயங்கள் பல உள்ளன. நிவாரணம் வழங்குவதை அரசியலாக்க வேண்டாம் என கருத்து தெரிவித்தனர். கரோனா விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விதிகளை மீறுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்குவது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து விளக்கமளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.
Discussion about this post