வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளி, சனிக்கிழமை (மே 21,22) ஆகிய இரு தினங்கள் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வியாழக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளி, சனி ( மே 21, 22) ஆகிய இரு நாள்கள் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மே 23, 24: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில்…: சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
தென்மேற்குப் பருவமழை:
தென்மேற்குப் பருவ மழை தெற்குஅந்தமான் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்க வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையத்தில் 100 மி.மீ. திருச்சி டவுனில் 70 மி.மீ. சேலம் மாவட்டம் வீரகனூா், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பெரம்பலூா், கள்ளக்குறிச்சி மாவட்டம் கலயநல்லூரில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 22, 23-ஆம் தேதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post