மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ-க்களைப் போன்று அவர்களுக்கும் மாத ஊதியம், தொகுதி மேம்பாட்டு நிதி போன்றவை வழங்கப்படும். மேலும் சட்டப்பேரவை வளாகத்தினுள் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமையும் வழங்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு, ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுக்கும் உரிமை இல்லை. இந்த மூன்று பேரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கலை, இலக்கியம், கல்வி, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட தளங்களில் இயங்குபவர்களை நியமிக்க வேண்டும் என்பது மரபு.
ஆனால் ஆட்சியில் அமரும் எந்த அரசும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. மாறாக, தங்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றவர்கள், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அந்தப் பதவியை வழங்கிவிடுவார்கள். புதுச்சேரி அரசியலும் இது விதிவிலக்கல்ல. நடந்து முடிந்த புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதேபோல காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், 9 தொகுதிகளில் போட்டியிட்ட பி.ஜே.பி 6 இடங்களிலும் வெற்றிபெற்ற நிலையில், 5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்து இடத்திலும் தோல்வியைத் தழுவியது. எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைத் தழுவின.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்றதால் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் அமைச்சரவைப் பங்கீடு முடியாததால், மே மாதம் 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் முதல்வராகப் பதவியேற்றார். தங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், ஒரு துணை முதல்வர், சபாநாயகர் பதவியும் வேண்டுமென்று ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால் ‘வெறும் ஆறு எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்திருக்கும் உங்களுக்கு எப்படி இவற்றைத் தர முடியும்… தவிர புதுச்சேரியில் துணை முதல்வர் என்ற ஒரு பதவியே இல்லையே’ என்று கடுப்பானார் ரங்கசாமி.
‘எண்ணிக்கைதான் உங்களுக்குப் பிரச்னையா?’ என்று நினைத்துக்கொண்ட பா.ஜ.க., சுயேச்சை எம்.எல்.ஏ-க்களுக்கு வலைவிரித்தது. தொடர்ந்து ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கிடையில் 9-ம் தேதி ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனே களத்தில் இறங்கிய மத்திய உள்துறை இரவோடு இரவாக பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. இது கூட்டணியில் இருந்த என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க-வை மட்டுமல்ல, உள்ளூர் பா.ஜ.க-வினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. காலம் காலமாக கட்சிக்காக உழைத்தவர்களை கழற்றிவிட்டுவிட்டு நேற்று வந்தவர்களுக்குப் பதவியா என்று கொந்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்குள் ‘ராஜ்யசபா எம்.பி பதவி’ என்ற அடுத்த அஸ்திரத்தை பா.ஜ.க கையில் எடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம், 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு அந்தப் பதவியை சென்னையைச் சேர்ந்த ‘ஜுடிசியல்’ கிருஷ்ணமூர்த்திக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம் பா.ஜ.க தலைமை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவரான இந்த ஜுடிசியல் கிருஷ்ணமூர்த்தி, நீதித்துறையில் பெரிய பெரிய தொடர்புகளைக்கொண்டவர்.
2018, ஜூன் மாதம் சென்னைக்கு வந்த அமித் ஷா கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று காபி குடித்துவிட்டுச் செல்லுமளவுக்கு இருவருக்கும் இடையேயான நட்பு வலிமை வாய்ந்தது. அந்த நெருக்கத்தின் காரணமாகத்தான் தனது நண்பரான கிருஷ்ணமூர்த்தியை ராஜ்யசபா எம்.பி-யாக்க முடிவெடுத்திருக்கிறாராம் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்தத் தகவல் புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தத் தகவலால், உள்ளுர் பா.ஜ.க-வினரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரும் ஏக டென்ஷனில் இருக்கிறார்களாம்!
Discussion about this post