கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சட்டமன்றக்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி 13 சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டப்பேரவை கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது’. இத்தீர்மானத்தின்படி அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதல்வரின் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது. இந்த ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், மருத்துவர் எழிலன் (திமுக), மருத்துவர் விஜயபாஸ்கர் (அதிமுக), ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), மருத்துவர் சதன் திருமலைக்குமார் (மதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (சிபிஎம்), ராமச்சந்திரன் (சிபிஐ), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சிபாரதம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Discussion about this post