அறநிலையத் துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒரு லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்த நிலையில், முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பிற திமுக தலைவர்களின் படங்கள் கொண்ட பேனர்களை வைத்து உணவுப் பொருட்களை விநியோகித்து திமுகவினர் விளம்பரம் தேடி வருகின்றனர்.
இதற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு கோவில்கள் பெயரிலேயே நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தமிழக அரசு உணவு வழங்க அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் ஆனால், இந்து கோவில்களின் வருமானத்தில் இந்து அறநிலையத் துறையின் பெயரில் கொடுக்க நினைப்பது ஆட்சேபனைக்குரியது என்றும் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பல வழக்குகளில் கோவில் வருமானத்தை கோவில் சம்பந்தப்பட்ட பணிகளைத் தவிர, அரசின் நலத்திட்டங்கள் போன்று வேறு எந்த விஷயத்துக்கும் பயன்படுத்த கூடாது என்று பல முறை சுட்டிகாட்டிய பின்பும் புதிதாக பதவியேற்றுள்ள தி.மு.க. அரசு சுய விளம்பரத்துக்காக, கோவில் நிதியை பயன்படுத்துவது அபத்தம் என்று கடுமையாக சாடியுள்ள இந்து முன்னணி, கோவில் நிதியில் செயல்படுத்தப்படுவதால் இந்தத் திட்டத்தில் உணவு பொட்டலங்களில் அந்தந்த கோவில் நிர்வாகங்கள் சார்பில் வழங்கபப்டுகிறது என்றும் சுவாமி படங்களும், பிரசாதங்களும், உணவு பொட்டலத்துடன் கொடுக்க வேண்டும் என்றும் இதனால் மக்களுக்கு இறை நம்பிக்கை ஏற்படுவதோடு மன தைரியமும் ஏற்படும் என்று இந்து முன்னணி சுட்டிக் காட்டியுள்ளது.
Discussion about this post