கொரோனா தடுப்பு பணி குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பால், காய்கறி, மளிகைக் கடைகள் காலை 10.00 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ- பதிவு நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஆனாலும், கொரோனா பாதிப்பு தலைநகர் சென்னையில் குறைந்தாலும், மற்ற மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்புப் பணிகள், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள், இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Discussion about this post