புதுச்சேரியில் தமது 3 நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரை வாபஸ் பெற்றுக் கொண்டு அதிமுகவின் அன்பழகனுக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. 6 இடங்களில் வென்ற பாஜக, என்.ஆர். காங்கிரஸுக்கு பீதியூட்டும் வகையில் திடீரென 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துக் கொண்டது. 3 சுயேட்சைகளையும் வளைத்துக் கொண்டது.
இதனால் புதுச்சேரி சட்டசபையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக மாற்றிக் கொண்டது. பாஜகவின் இந்த அணுகுமுறை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதுவையில் ரங்கசாமியை முதல்வராக்குவது போல் ஆக்கிவிட்டு அவரது ஆட்சியை கவிழ்த்து தனித்து ஆட்சி அமைக்க பாஜக சதி செய்கிறது என குற்றம்சாட்டப்பட்டது.
புதுவையில் என்.ஆர்.காங்- பாஜக கூட்டணியில் இடம் பெற்ற அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால் நியமன எம்.எல்.ஏ. பதவியை அதிமுக கேட்டது. ஆனால் அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்து தமது கட்சிக்கே 3 நியமன எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டது. இதனால் என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவை ஒருசேர பாஜக ஒழிக்கப் பார்க்கிறதோ என்கிற கேள்வியும் எழுந்தது.
பாஜகவின் இந்த அதிரிபுதிரி கொல்லைப்புற ஆட்சியை பிடிக்கும் முயற்சிகள் கடுமையான விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இப்போது திடீரென பாஜக பின்வாங்க தொடங்கி இருக்கிறதாம். தமது நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாம். அதாவது ஒரு நியமன எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைக்கப் போகிறதாம்.
அப்படி ராஜினாமா செய்யும் இடத்தில் புதுவையில் அதிமுகவின் முகமான அன்பழகனுக்கு அந்த வாய்ப்பை தருகிறதாம் பாஜக. அதாவது கூட்டணி கட்சிகளை அழிக்கவில்லை; அரவணைக்கிறோம் என உலகத்துக்கு காட்டுகிற வகையில் இப்படியான ஒரு நடவடிக்கையை பாஜக கையில் எடுத்திருக்கிறது என்கின்றன புதுச்சேரி வட்டாரங்கள்.
Discussion about this post