அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழையும், 3 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘நேற்று கச்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி தற்போது மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் .
இதன் காரணமாக இன்று மே 15 இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள், தெற்கு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மே 16 (நாளை) நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மே 17 அன்று நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மே 18 அன்று நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
மே 19 அன்று நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
நீலகிரி 14 செ.மீ., பெரியாறு (தேனி) சோலையாறு (கோவை) தலா 10 செ.மீ., தக்கலை (கன்னியாகுமரி) 9 செ.மீ., பெருஞ்சாணி (கன்னியாகுமரி) தேக்கடி (தேனி) கன்னியாகுமரி தலா 8 செ.மீ., சுருளகோடு (கன்னியாகுமரி) குழித்துறை (கன்னியாகுமரி) பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) சின்னக்கல்லாறு (கோவை) தலா 7 செ.மீ., குளச்சல் (கன்னியாகுமரி) வால்பாறை தாலுகா (கோவை) மைலாடி (கன்னியாகுமரி) 6 செ.மீ., நாகர்கோவில் (கன்னியாகுமரி) 5 செ.மீ., பாபநாசம் (திருநெல்வேலி) பூதப்பாண்டி (கன்னியாகுமரி) குந்தா பாலம் (நீலகிரி) கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ., நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பஜார், உதகமண்டலம் குன்னூர், எமரால்டு, மேல் பவானி, அவலாஞ்சி, கோத்தகிரி, நடுவட்டம், பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), இரணியல் (கன்னியாகுமரி), நாங்குனேரி (திருநெல்வேலி) உடுமலைப்பேட்டை (திருப்பூர்) பொள்ளாச்சி (கோவை) தலா 2 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மே 15 அன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மே 16 நாளை மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post