மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இரவு நேர ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
போக்குவரத்து இல்லை
► இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை அமல்படுத்தப்படும்.
► இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
► தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.
►மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் அனுமதி
► அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம்/ ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
► ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.
► பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
► தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
► மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் வார நாள்களில் இரவு 9 மணிவரை மட்டுமே செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாள்கள் உள்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post