திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக எம்பி ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பதவிபெற்றது மற்றும் தாயார் குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. மு.க.ஸ்டாலின் முறையாக பிறந்த நல்லக்குழந்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என அருவறுத்தக்க வகையில் பேசியிருந்தார்.
ஆ.ராசாவின் பேச்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இரண்டு நாட்கள் கழித்து தனது பேச்சு குறித்து மன்னிப்பு கோரியிருந்தார். ஆ.ராசாவின் பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அளித்த புகாரின் பேரில், 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் ஒன்றை அனுப்பி, வழக்கறிஞருடன் நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆ.ராசா 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என இன்று தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்தும் ஆ.ராசா பெயரை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் ஆ.ராசா முதல்வர் பற்றி பேசியது குறித்து கேள்வி எழுபப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்தில் பேசும் பொழுது சில வார்த்தைகள் நம்மையும் அறியாமல் வாய் தவறி வருவது இயல்பு. ஆனால் ஆ.ராசா பேசியதற்கு அவரே உடனடியாக வருத்தம் தெரிவித்துவிட்டார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்கிட்ட கேள்வி கேட்டால் அறைச்சிடுவேன்னு சொல்லுறாங்க. அந்த மாதிரி ஏதாவது நாங்கள் மிரட்டல் விடுத்தோமா?. சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாக பேசும் போது தவறு நடந்துவிடுகிறது. இதையெல்லாம் நிச்சயம் தவிர்த்திருக்கலாம். எனக்கே சில நேரங்களில் இதையெல்லாம் பேசாமல் தவிர்த்திருக்கலாமோ? என தோன்றியது உண்டு என தெரிவித்தார்.
Discussion about this post