ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகளை தமாகா கேட்டிருந்தது. இரண்டுகட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாகவும் தமாகாவுக்கு ஒன்றை இலக்க இடங்களை வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 5-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமாகா தனி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தது.
அதேநேரத்தில், தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்னும் வழங்கவில்லை.
இதனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று தமாகா தலைமையிடம் அதிமுக தலைமை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், கூட்டணி பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என்று தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை என்றால் தொகுதிக்கு புது சின்னத்தைப் பிரபலப்படுத்துவது கடினமாகிவிடும் என்றுநிர்வாகிகள் கூறினர். இதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே தமாகா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக-தமாகா இடையே இன்று அல்லது நாளை உடன்பாடு கையெழுத்தாகவுள்ளதாகத் தெரிகிறது.
Discussion about this post