தொகுதிப் பங்கீடு குறித்து விரைந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என அக்கறையோடு கூறியதை, நான் அவரசப்படுகிறேன், டென்ஷன் ஆகிறேன், கெஞ்சுகிறேன் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். தேமுதிகவுக்கு கெஞ்சிப் பழக்கமில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசினார்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேமுதிக மண்டலப் பொறுப்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:
”தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக. யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
மக்களைச் சந்திக்க குறுகிய காலமே உள்ளது. 234 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்பதை விளக்கிக் கூற கால அவகாசம் வேண்டும் என்பதால்தான் சில நாட்களுக்கு முன்பு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து விரைந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என அக்கறையோடு கூறினேன்.
தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா.
ஆனால், தற்போது தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவுக்கு குறுகிய நாட்களே இருப்பதை, அப்போது ஏளனமாக பேசியவர்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள். நான் அவரசப்படுகிறேன், டென்ஷன் ஆகிறேன், கெஞ்சுகிறேன் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். தேமுதிகவிற்கு கெஞ்சிப் பழக்கமில்லை. எந்தக் காலத்திலும் டென்ஷன் இல்லை. தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்ட கட்சி. இருப்பினும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருப்பதால் கூட்டணியை நாட வேண்டியுள்ளது. நிச்சயம் நமக்கான காலம் வரும். அப்போது விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
Discussion about this post