புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.
இதையடுத்து புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக செயல்பட்டுவருகிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அதே தினமான, ஏப்ரல் 6ம் தேதியே நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, பாஜக புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, களப்பணியை ஏற்கனவே தீவிரமாக தொடங்கிவிட்டது. மத்திய இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் ஆகிய புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர்கள் புதுச்சேரியில் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரமாக பாஜக மேற்கொண்டுவருகிறது. கடந்த 25ம் தேதி புதுச்சேரிக்கு வந்து, முடிவுற்ற நலத்திட்டங்களை திறந்துவைத்து, புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டிவிட்டு சென்றார். இந்நிலையில், வரும் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காரைக்காலில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பரப்புரை செய்கிறார்.
அதற்கான ஏற்பாடுகள் காரைக்காலில் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேரை திரட்ட பாஜக தீர்மானித்துள்ளது. அமித் ஷா வருகைக்கான பணிகளையும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு ஒருசில தினங்களுக்கு முன், தேர்தல் பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால் காரைக்காலில் பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜக செயல்வீரர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு சென்றார்.
பாஜக எம்பியான ராஜீவ் சந்திரசேகர், காரைக்கால் மற்றும் திருநள்ளார் பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடன் கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்துவதுடன், அமித் ஷா வருகையை அமர்க்களப்படுத்தவும், புதுச்சேரியில் ஆட்சியமைக்கவும் களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
Discussion about this post