பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லியிலிருந்து இன்று காலை சென்னை வந்து, சென்னையிலிருந்து புதுச்சேரி சென்று, அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டிவிட்டு, புதுச்சேரியிலிருந்து கோவை வந்தார் பிரதமர் மோடி.
கோவையில் நடந்த விழாவில் தமிழகத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கிவைத்தார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணித்தார். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்தார்.
அதேபோல கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரெயில்வே பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.20 கோடி செலவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின் சக்தி தொகுப்புக்கும் மோடி அடிக்கல் நாட்டினார். கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்பட 9 ‘ஸ்மார்ட்’ நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
கோவை கொடிசியா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி. புதுச்சேரியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் மோடி, கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்றார். அப்போது கொடிசியா மைதானம் செல்லும் வழியில் வழிநெடுக பாஜகவினரும் தமிழக மக்களும் நீண்டவரிசையில் நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக மக்கள் அளித்த உற்சாக வரவேற்பால் நெகிழ்ந்துபோன பிரதமர் மோடி, அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து, உற்சாக வரவேற்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி என மனதார நன்றி தெரிவித்துள்ளார்.
Related
Discussion about this post