அய்யம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஏழைகாத்தம்மன்- வல்லடிக்காரர் சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் 600 காளைகள் பங்கேற்கின்றன. 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது.
தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக காலை 11 மணி நிலவரப்படி, 200 காளைகள் வாடிவாசல் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் பிடிக்க அங்குள்ள குளத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலிக்குள் போட்டியில் கலந்து கொண்டு வரும் காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் கயிறு போட்டு பிடித்து வாகனங்களில் ஏற்றி தங்கள் வீடுகளுக்கு அழைத்து செல்வார்கள். அவ்வாறு மாடுகளைப் பிடிக்கும் இடத்தில் பார்வையாளர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.
இதில் சின்னமனூர் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் முருகேசன் (29) என்பவரை ஜல்லிக்கட்டு காளை முட்டி தூக்கி வீசியது. முதுகுப் பகுதியில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதேபோல மாடுபிடி வீரர்கள் 12 பேர் சிறிய காயங்களுடன் தேனி மற்றும் சின்னமனூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Discussion about this post