சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாரா அப்படி வரும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலாவை வரவேற்க அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒன்று கூட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் சசிகலா விடுதலை ஆன நாள் முதலே பல மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை அவரது ஆதரவாளர்கள் ஒட்டி வருகின்றனர். அப்படி சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் ஒவ்வொருவரையும் கட்சியிலிருந்து அதிமுக தலைமை நீக்கி வருகிறது. சசிகலா வருகைக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சசிகலா வரவேற்பு பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் அருகே உள்ள செந்நெல்குடி பகுதிகளில் அதிமுக கட்சியினர் தங்களது அதிமுக அடையாள அட்டையுடன் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் அடிமட்ட தொண்டனும் முதல்வர் ஆகலாம் என்பதை செயல்படுத்திக் காட்டிய சின்னம்மா அவர்களே வருக வருக. சுயநலம் இல்லாமல் கழகத்தை காத்து இன்னும் நூறாண்டு காலம் அதிமுக ஆட்சியை நடத்தி, அம்மாவின் கனவை நனவாக்க வருகைதரும் பொதுச் செயலாளர், தியாகத்தலைவியே, கழக தொண்டர்களை காக்க வருக வருக என இந்த சுவரொட்டிகளில் வாசகம பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் அப்பகுதியில் மட்டுமல்ல அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post