தமிழக மக்களிடம் நாங்கள் காட்டும்விசுவாசத்துக்கு கிடைத்த வெகுமதிதான்அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட 644 அறிவிப்புகளில், 607 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் 198 திட்டங்கள் முழுமையாக நிறைவேறியுள்ளன. 409 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. 31 திட்டப் பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. 6 அறிவிப்புகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.
அதேபோல, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட 568 அறிவிப்புகளில் 566-க்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, 289 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 277 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 அறிவிப்புகளுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த அரசு பதவியேற்றது முதல் இன்றுவரை ரூ.42,144 கோடியே 69 லட்சம் மதிப்பில், 48,782 பணிகள் என்னால் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.36,912கோடியே 97 லட்சம் மதிப்பில் 8,012 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.79,057 கோடியே 66 லட்சம்மதிப்பில், 56,794 பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
நாடு முன்னேற்றமடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் நேரத்தில், தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது, அதை துணிந்துஎதிர்த்து குரல் கொடுப்பதற்கும் தயங்கவில்லை. தேவை ஏற்பட்டால் சட்டப் போராட்டங்களையும் நடத்தி, தமிழர்களின் உரிமையை மீட்டுத் தந்து, மாநில நலனை பாதுகாத்தது இந்த அரசுதான். காவிரி, முல்லை பெரியாறு, இருமொழிக் கொள்கை, ஜல்லிக்கட்டு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமையை நிலை நிறுத்தியதே இதற்குச் சான்று. அதேபோல, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு சட்டம் இயற்றி, டெல்டா பகுதி விவசாயிகளை பாதுகாத்துள்ளது.
நிவர், புரெவி புயல்களால் பாதிப்புக்கு உள்ளான வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு உயர்த்தப்பட்ட இடுபொருள் மானியம் வழங்க ரூ.565.46 கோடி ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவ உள்கட்டமைப்பாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பிற அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் தன்னலம் கருதா பணியினாலும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழகம் வெற்றியடைந்துள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, தமிழகத்தை கரோனா தொற்று இல்லாத மாநிலமாக உருவாக்குவோம். கரோனா கட்டுப்பாடு, நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.7,604.80 கோடி செலவிட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளித்ததால், இந்த ஆண்டில் 435 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும், ரூ.60,674 கோடி முதலீட்டில் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புவழங்கும் வகையில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அரசு கையெழுத்திட்டது.
சட்டம், ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டு, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. சென்னையில் உள்ள காவல் துறை மருத்துவமனை, அனைத்து பிரதான மருத்துவ துறைகளையும் உள்ளடக்கிய முழுத் திறன் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும். காவலர்கள் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க ஏதுவாக, சென்னையில் ஏற்கெனவே காவல் உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் காவல் உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
இந்த ஆட்சியை நிராகரிக்க வேண்டும் என்று உண்மைக்குப் புறம்பாக சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக மக்களோ இந்த ஆட்சியே தொடர வேண்டும் என விரும்புகின்றனர். தேர்தலில் அதிமுக 3-ம் முறையாக ஹாட்ரிக் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். இன்றைக்கு ஆளும் கட்சி வரிசையில் இருக்கும் நாங்கள், தொடர்ந்து இந்த இடத்திலேயே இருப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Discussion about this post