புதுச்சேரியில் தற்போது திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 16 தொகுதிகள் தேவை என்கிற நிலையில் திமுகவின் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கு உள்ளதாக நாராயணசாமி கூறி வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எனவே காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13ஆக குறைந்துள்ளது.
தற்போதைய மொத்த எம்எல்ஏக்கள் 28 பேரில் பெரும்பான்மைக்கு 15 எம்எல்ஏக்களின் ஆதரவு நாராயணசாமிக்கு தேவை.
ஆனால் திமுக நாராயணசாமியை தற்போது ஆதரிக்குமா என்பதில் குழப்பம் நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு பிறகு சென்னை வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாராயணசாமி சந்தித்து சென்றார். அதன் பிறகும் கூட சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். அத்தோடு புதுச்சேரிக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன் கடந்த வாரம் புதுச்சேரி சென்று சட்டப்பேரவை தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், கடந்த காலங்களில் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் – திமுக கூட்டணி அமைந்ததை சுட்டிக்காட்டினார். இதன் மூலம் புதுச்சேரியில் தனித்து களம் இறங்கும் முடிவில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பது தெரியவருகிறது. எனவே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை வந்தால் திமுக நாராயணசாமியை ஆதரிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு. அதே சமயம் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் மேலும் சிலரும் விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது நடந்துவிட்டால் திமுக ஆதரித்தாலும் கூட நாராயணசாமியால் ஆட்சிப் பொறுப்பில் நீடிக்க முடியாது. எனவே பெரும்பான்மையை நாராயணசாமி நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும். இல்லை என்றால் நாராயணசாமியை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி டிஸ்மிஸ் செய்வது உறுதி. இந்த இக்கட்டான சூழலில் கடந்த வாரம் நாராயணசாமி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி முதலமைச்சர் நீங்கள் தான், எம்எல்ஏக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை என்று ராகுல் கூறிவிட்டதாக சொல்கிறார்கள். எனவே கட்சித் தலைமையும் கைவிட்ட நிலையில் புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்வது உறுதி என்கிறார்கள்.
The post நாராயணசாமி பெரும்பான்மை எங்கே… பாஜகவில் உள்ளது…! appeared first on தமிழ் செய்தி.
Discussion about this post