கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று இரவு வரை 52 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்த மதுவை குடித்ததால் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றில் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர். நேற்று இரவு வரை மொத்தம் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாண சுந்தரம் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் கண்பார்வை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை காப்பாற்ற தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு சிகிச்சை அளிக்கும் பணியை முடுக்கி விடுகிறார். இதனுடன் கருணாபுரத்தில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்.
Discussion about this post