தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 6 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (புதன்கிழமை) முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post