வெளிச்சந்தையில் விலை உயர்வால் அடுத்த சில மாதங்களில் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வினியோகத் திட்டத்தின் விளைபொருளாக பருப்பு மற்றும் பாமாயிலை தமிழக அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் விநியோகம் செய்து வருகிறது.
அதன்படி கடந்த 2007ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் பருப்பு கிலோ ரூ.30க்கும், பாமாயில் லிட்டர் ரூ.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பயனடைகின்றனர். இதற்காக கடந்த 2007ம் ஆண்டு வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ பருப்பு ரூ.50க்கு அரசு கொள்முதல் செய்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.30க்கு வழங்கியது.
அதேபோல், பாமாயில் ரூ.45க்கு வாங்கி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.25க்கு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது, வெளிச்சந்தையில் பருப்பு, பாமாயில் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2014-15ம் ஆண்டில் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக அரசு ரூ.1,800 கோடி மானியம் வழங்கியது. இப்போது இந்த மானியத் தொகை ரூ.3,800 கோடியாக அதிகரித்துள்ளது.
தற்போது வெளிமார்க்கெட்டில் பருப்பு கிலோ ரூ.155 வரை விற்பனையாகிறது. அதேபோல் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலைக்கு தமிழக அரசு கொள்முதல் செய்தாலும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பருப்பு கிலோ ரூ.30க்கும், பாமாயில் கிலோ ரூ.25க்கும் வழங்கப்படுகிறது.
எனவே, ரேஷனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் பருப்பு, பாமாயில் விலை இன்னும் சில மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post