காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து, அந்த 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் தமிழகத்தின் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன்படி காவிரி ஆற்றில் 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வருகிறது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்தது. மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பிலிகுண்டு காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதான அருவி, சினிபால்ஸ் மற்றும் ஐந்து அருவிகள் நிரம்பி வழிகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக 26 நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் போலீசார், வருவாய் துறையினர், தீயணைப்பு மீட்பு படையினர், ஊர்க்காவல் படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post