சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஃபார்முலா 4 கார் பந்தயம் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் சென்னை தீவுக்கூட்டத்தை சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, 8,000 பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள், பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிஎன்எஸ் பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.