சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருந்த கார் பந்தயம் மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபார்முலா 4 கார் பந்தயம் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் சென்னை தீவுக்கூட்டத்தை சுற்றி 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. மின் விளக்குகள் அமைத்தல், 8,000 பேர் பந்தயத்தை ரசிக்கும் வகையில் இருக்கைகள், பாதுகாப்பு வேலிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிஎன்எஸ் பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், ‘சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கார் பந்தயத்தை தடை செய்ய முடியாது. சர்வதேச மோட்டார் வாகன கூட்டமைப்பு (FIA) பந்தயத்தை நடத்த உரிமம் பெற வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கார் பந்தயத்தை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.