பார்முலா 4 கார் பந்தயத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த அலிபாய் முதலிடம் பெற்றார்.
இந்த ஆண்டுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. 2வது சுற்று ஆட்டம் நேற்று (31-08-24) சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. அதன்படி நேற்று இரவு பார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நடைபெற்றது. இதையடுத்து இன்று தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வந்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது.
இப்போட்டியில் ஐதராபாத்தை சேர்ந்த அலிபாய் முதலிடம் பிடித்துள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த திவி நந்தன் இரண்டாம் இடத்தையும், பெங்களூரைச் சேர்ந்த ஜெய்டன் பாரியட் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஃபார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடந்தது. சென்னை மக்களின் ஆதரவுடன் போட்டி சிறப்பாக நடந்தது. ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் மூலம் சென்னைக்கு பெருமை கிடைத்துள்ளது என நம்புகிறேன். இந்த கார் பந்தயம் தமிழக விளையாட்டு வரலாற்றில் மகத்தான இடத்தைப் பிடிக்கும். அடுத்த போட்டி குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.