சீன ஆய்வகத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக 2020ம் ஆண்டிலேயே ஜெர்மன் உளவுத்துறை ஆதாரங்களை கண்டறிந்தது. ஆனால், அப்போதைய அரசு அந்த உண்மையை மறைத்ததாக சமீபத்தில் வெளிவந்த புதிய அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனா வைரஸ், சீனாவின் குகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய வௌவாலிலிருந்து வந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
உலக நாடுகளின் சமூக, பொருளாதார அமைப்புகளை கடுமையாக பாதித்த இந்த வைரஸ், எந்த வழியில், எப்போது வௌவாலிலிருந்து மனிதர்களுக்கு பரவியது என்பது இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது உலகளாவிய அளவில் பரவியது. 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ம் தேதி, உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 ஐ உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது.
SARS-CoV-2 என்ற கொரோனா வைரஸால் உருவான COVID-19 நோயால் உலகம் முழுவதும் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் 75 கோடியே 72 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் வூகான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக ஜெர்மன் உளவுத்துறை 2020ம் ஆண்டிலேயே அறிந்ததாக இரண்டு முக்கிய ஜெர்மன் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Zeit மற்றும் Suddeutsche Zeitung ஆகிய நிறுவனங்களின் தகவலின்படி, கொரோனா வைரஸ் வூகான் ஆய்வகத்திலேயே உருவாகியதாக ஜெர்மன் உளவுத்துறையின் விசாரணை 2020ம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், மேற்கத்திய நாடுகளுடன் இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு ஜனவரியில், கோவிட்-19 உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய நிலையில், வைரஸ் உருவான இடத்தை கண்டறிய ஜெர்மனி உளவுத்துறை ‘Project Saaremaa’ என்ற ரகசிய நடவடிக்கையை தொடங்கியது.
உலகின் முக்கிய அரசுகள் மற்றும் அறிவியல் நிறுவனங்களிடமிருந்து தரவுகளை ரகசியமாக சேகரிக்க நிபுணத்துவம் பெற்ற உளவுத்துறை அதிகாரிகள் இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அந்த அதிகாரிகள், வெளியிடப்படாத தரவுகள், சீன ஆய்வகங்களின் உள் ஆவணங்கள் மற்றும் 2019-2020ம் ஆண்டுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகளை சேகரித்ததாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸின் ஆரம்ப கட்ட பரவல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து சீன அரசுக்கு பெரிதும் புரிதல் இருந்தது என்பது ஜெர்மன் உளவுத்துறைக்கு கிடைத்த முக்கியமான தகவலாகும்.
மேலும், கோவிட்-19 வைரஸ் சீனாவில் தோன்றியது என்பதை உறுதிப்படுத்தும் 95% ஆதாரங்களை ஜெர்மன் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போதைய ஜெர்மன் அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு, இந்த தகவலை பொது மக்களிடம் வெளியிடாமல் வைத்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இந்த அறிக்கையைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.
ஜெர்மன் உளவுத்துறையின் இந்த அறிக்கை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான CIA-வுடன் பகிரப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில், சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI உறுதியாக தெரிவித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் உள்ள ஆய்வகத்திலிருந்துதான் வைரஸ் பரவியது என்ற குற்றச்சாட்டை சீன அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது.
ஒரு ஆய்வகத்திலிருந்து கசியியுள்ள வைரஸ், உலக அளவில் பேரழிவை உருவாக்கியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீன அரசு, ஒரு சிறிய விபத்தை உலகளாவிய பேரழிவாக மாற்றியுள்ளதாகவும், அந்த தவறால் உலகம் இன்னும் பாதிக்கப்படுவதாகவும் கணிப்புகள் கூறுகின்றன.