வங்கதேசத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். நாடு முழுவதும் பரவியுள்ள இந்த எதிர்ப்புகள் இடைக்கால அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.
கடந்த ஆண்டில் மாணவர் எழுச்சியின் காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தார். அதன் பின்னர், முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்டது.
இந்த இடைக்கால ஆட்சி, “சீர்திருத்தம்” என்ற பெயரில் பல கட்டாய தீர்வுகளை எடுத்து வருகிறது என்பதற்கான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுத் தேர்தலை தாமதப்படுத்தும் திட்டமொன்று நடைபெற்று வருவதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி இயக்கத்தில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில், ராணுவத் தளபதி வாக்கர்-உஸ்-ஜமான், இடைக்கால அரசு சுயமாக தீர்மானங்களை எடுத்து வருகின்றதாகவும், ராணுவ விசயங்களில் தலையீடு செய்யாமல் இருக்கவேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
அதேசமயம், தவறான நடத்தைக்காக விசாரணை இல்லாமல் 14 நாட்களுக்குள் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அவசர சட்டத்தை யூனுஸ் அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக அரசு ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் பல அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் இணையத் தொடங்கியுள்ளனர். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அவர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 5-ம் தேதி பகுதி அளவில் போராட்டம் ஆரம்பித்த ஆசிரியர்கள், கடந்த திங்களன்று முழுமையான வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர் என்று ‘டெய்லி ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு, எதிர்க்கட்சி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் ஒருசேர எதிர்ப்பு தெரிவித்துவருவதால், வங்கதேச இடைக்கால அரசு கடும் அழுத்தத்தில் சிக்கியுள்ளது.