துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் – 14 வயது சிறுமி உயிரிழப்பு, 70 பேர் காயம்
துருக்கியில் இன்று அதிகாலை 2.17 மணியளவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பீதி காரணமாக வீடுகளை விட்டு வெளியே ஓடிய மக்களுள், 14 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம், துருக்கியின் மேற்கு பகுதியிலுள்ள மத்திய தரைக்கடலுக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மர்மாரிஸுக்கு அருகே பதிவாகியுள்ளது. இது குறித்து துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறை (AFAD) எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த செய்தியில், “மத்திய தரைக்கடலில், மர்மாரிஸை ஒட்டிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரேக்க தீவு ரோட்ஸ் உட்பட பிற அருகிலுள்ள இடங்களிலும் அதிர்வு உணரப்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், உறக்கத்தில் இருந்த மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறினர். சிலர் ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளின் வழியாக கீழே குதித்ததன் காரணமாக பலர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர், ஒரே சிறுமி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா கூறியதாவது: “பீதியால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருந்ததா என்பது இன்னும் தெரியவில்லை. சுமார் 70 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிடங்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை” என்றார்.
2023-ஆம் ஆண்டில் துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதில் 53,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் எண்ணற்ற கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன. அண்டை நாடான சிரியாவின் வடக்குப் பகுதியில் மட்டும் 6,000 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன.