எலான் மஸ்க் – ட்ரம்ப் மோதல்: பின்னணி மற்றும் விளைவுகள்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் பின்னணியில், பில்லியனர் தொழிலதிபர் எலான் மஸ்க், “ட்ரம்ப் குறித்து கடந்த வாரம் பதிவிட்ட சில கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டவை. அதற்காக நான் வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய வாரங்களில், ட்ரம்பின் நடவடிக்கைகள் குறித்த சில விமர்சனங்களை எலான் மஸ்க் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். இதற்கான விளக்கமாக, அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் அந்த கருத்துகள் ஓரளவு ஆவேசமாக இருந்ததாக ஏற்றுக்கொண்டார்.
மூலக்காரணம் என்ன?
ட்ரம்ப் மீண்டும் அதிபராக பதவி ஏற்ற பின்னர், அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும் குழுவில் மஸ்க்கு முக்கியப் பங்கு வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான அமெரிக்க பட்ஜெட்டில் அவரது பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் $7,500 மானியம் நீக்கப்பட்டதாலும், அவருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான வரிச்சலுகைகள் நீக்கப்பட்டதாலும் மஸ்க் அதிருப்தி அடைந்தார்.
இதன் காரணமாக அவர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவதாகவும், பட்ஜெட்டை கடுமையாக விமர்சிக்கிறார். இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “மஸ்க்கு வழங்கப்படும் அரசு மானியங்களையும் ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதே நிதி மிச்சப்படுத்தும் வழி” எனக் கூறி பதிலடி கொடுத்தார்.
விளைவுகள்
இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் அதிகரிக்க, மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் ஒரே நாளில் 14% வீழ்ந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ₹1.28 லட்சம் கோடியளவுக்கு நட்டம் ஏற்பட்டது.
இதற்குப் பின்னர் ட்ரம்ப், “மஸ்க்குடன் என் நட்பு முற்றுப்பெற்றுவிட்டது. அவர் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளித்தால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்வார்” என எச்சரிக்கை தெரிவித்தார்.