டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறை தலைவர் பதவி விலக வேண்டும் என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பிடன் களம் இறங்கியுள்ளார். அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் டொனால்ட் டிரம்பின் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பைச் சுற்றி பாதுகாப்புச் சுவர் அமைத்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்ட் டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உலக பணக்காரரான எலோன் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எலோன் மஸ்க் கூறுகையில், டொனால்ட் டிரம்பிற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று, இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த உளவுத்துறை தலைவர் பதவி விலக வேண்டும்,” என்றார்.
Discussion about this post