வங்கதேசத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று வங்கதேசம் தனி நாடானது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
2018ல் மாணவர் போராட்டத்தை தொடர்ந்து இடஒதுக்கீடு முறை கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தப் போவதாக சமீபத்தில் அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. மாநில அரசு தொலைக்காட்சி நிலையத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை அடுத்து நிலைமை மோசமடைந்தது.
இதேபோல், தலைநகர் டாக்காவின் வடக்கே உள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை அடுத்து சுமார் 800 கைதிகள் தப்பியோடினர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், செல்போன் இணையதள சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கலவரக்காரர்களை கண்டால் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நிலைமையை சமாளிக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 115 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால், அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து நாடு திரும்பி வருகின்றனர். சுமார் 1000 இந்திய மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post