சீனா, ரஷ்யா கூட்டு கடற்படை போர் ஒத்திகைகள் மூன்றாம் உலகப்போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? அதைப் பற்றி பார்ப்போம்.
தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜான்ஜியாங் கடற்படை துறைமுகத்தில் சீனா-ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டுப் பயிற்சியானது, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும் இரு கடற்படைகளின் திறனை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த பயிற்சிகளில் ஏவுகணை எதிர்ப்பு பயிற்சிகள், கடற்படை தாக்குதல்கள் மற்றும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயிற்சியின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு மற்றும் வடக்கு பசிபிக் பெருங்கடலுக்கு இரு தரப்புப் படைகளும் சென்றதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா-ரஷ்யா கடற்படை பயிற்சிகளின் தன்மை அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவப் பயிற்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று கூறியுள்ள சீன ராணுவம், இந்தக் கூட்டுப் பயிற்சிகள் மற்ற நாடுகளுக்கு விரோதமானவையாக விளங்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும், சீனா-ரஷ்யா கடற்படை பயிற்சி மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த வாரம் நேட்டோ உச்சி மாநாட்டில் நேட்டோ நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டியதன் பின்னணியில் இந்த கூட்டுப் பயிற்சிகள் நடந்துள்ளன.
32 உறுப்பினர்களைக் கொண்ட நேட்டோ உச்சி மாநாடு கடந்த வாரம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இந்திய-பசிபிக் பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து நேட்டோ மாநாட்டின் முடிவில் ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டது. நேட்டோ அறிக்கை, சீனா ரஷ்யாவின் செயலூக்கமான செயலாளராக மட்டுமல்லாமல் ரஷ்யாவின் கைக்கூலியாகவும் மாறியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த அறிக்கையில், ரஷ்யாவுடனான சீனாவின் உறவு வரம்பற்ற கூட்டணி என்றும், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு சீனா எல்லா வகையிலும் உதவுவதாகவும், உக்ரைன் போருக்கு சீனாதான் தூண்டுகோலாக உள்ளது என்றும் கூறியுள்ளது.
நேட்டோவின் இந்த அறிக்கையை சீனா உடனடியாக மறுத்தது. ஐரோப்பாவில் நடக்கும் போரை ஆசியாவிற்குள் கொண்டு வர வேண்டாம் என்றும் ஆசியாவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் நேட்டோவை சீனா எச்சரித்தது.
ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தகம் முறையானது மற்றும் நியாயமானது மற்றும் WTO விதிகளின் அடிப்படையில் உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறினார்.
நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு எப்போதுமே மற்ற நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்று கூறிய லின் ஜியான், நேட்டோவின் விரிவாக்கம் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் என்ற ரஷ்யாவின் வாதத்தை நியாயப்படுத்தினார்.
2022 ஆம் ஆண்டு முதல், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து, சீனா ரஷ்யாவின் ஆதரவாளராக மாறியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான நல்லுறவையும் சீனா முறித்துக் கொண்டது.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை சீனா பெரிதும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தை ரஷ்யா ஓரளவு ஈடுசெய்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமிக்கத் துடிக்கும் சீனா, ரஷ்யாவுடன் கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டதன் மூலம் 3ம் உலகப் போர் குறித்த விவாதங்களைத் தொடங்கியுள்ளது.
தென் சீனக் கடல் முழுவதையும் உரிமை கொண்டாடும் சீனா, பிலிப்பைன்ஸுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
தைவானை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதும் சீன அரசு, தைவானை அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் தைவான் எல்லைப் பகுதியில் ராணுவ பயிற்சிகளை நடத்தியது.
உக்ரேனில் ரஷ்யர்களுக்கு சீனாவின் ஆதரவு மற்றும் தென் சீனக் கடல் மற்றும் தைவான் ஜலசந்தியில் அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஆகியவை புவிசார் அரசியல் பதட்டங்களைத் தூண்டியுள்ளன.
மேலும், இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா தனது ஆக்ரோஷ நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செயல்பாடுகளை பார்க்கும் போது, நடந்து வரும் சீனா-ரஷ்யா கூட்டு கடற்படை போர் பயிற்சிகள் உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், பனிப்போருக்குப் பிறகு முதல் முறையாக ஜெர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
2026 முதல் ஜெர்மனியில் அணுசக்தி அல்லாத Tomahawk க்ரூஸ், SM-6 மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முடிவை ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வரவேற்றுள்ளார்.
அதேநேரம், ஜெர்மனிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ரஷ்யா ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இது மூன்றாம் உலகப் போருக்கு அமெரிக்காவும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தயாராகி வருவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல்-காசா போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், மேற்குலக நாடுகளுக்கு எதிராக சீனாவும் ரஷ்யாவும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. மூன்றாம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் புவிசார் அரசியல் அறிஞர்கள்.
Discussion about this post