ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி அறிவித்தார்.
இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார்.
ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹூதிகள் உட்பட ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி பிடன் மீண்டும் உறுதிப்படுத்தினார். இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுடன், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டத்தைத் தணிக்க தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த அழைப்பில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் இணைந்தார்,” என, வெள்ளை மாளிகை கூறியுள்ளது.இதையடுத்து, மத்திய கிழக்கில், அமெரிக்கா ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. கூடுதல் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், மத்திய கிழக்குக்கு விரைந்துள்ளன.
Discussion about this post