வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும், தலைநகர் டாக்காவிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் வன்முறை நீடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக நடந்த வன்முறையில் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ விமானத்தில் நேற்று இந்தியா வந்தார். அவர் அங்கிருந்து லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஹக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்து கோவில்கள் தாக்கப்பட்டன. இந்து வீடுகள் மற்றும் இந்து கடைகள் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
டாக்காவில் போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் புகுந்து சூறையாடினர். ஹசீனாவுக்குச் சொந்தமான நிறுவனங்களும் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. மேலும் நாட்டின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. வங்கதேசத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையில் 119 பேர் பலியாகியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 119 பேர் கொல்லப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் இதுவரை 440 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 37 உடல்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்றிரவு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் அனைத்து அரசியல் கட்சிகளையும் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சரிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்கள் மற்றும் அரசு சொத்துக்களைப் பாதுகாக்க ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை வங்கதேசத்தில் அமைதி திரும்பியது, பேருந்து மற்றும் வாகன போக்குவரத்து சேவைகள் துவங்கி சில கடைகள் திறக்கப்பட்டு அரசு வாகனங்கள் அலுவலகத்திற்கு சென்று வருகின்றன. மேலும் தேசிய தலைநகரில் உள்ள கல்வி நிறுவனங்கள் குறைவான வருகையை கண்டதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
Discussion about this post