வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் நாளை பதவியேற்கவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கிடையில், நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். அத்துடன், இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக முப்படைகளின் தளபதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுவின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, வங்கதேச அதிபர் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸை நியமித்தார். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் நாளை பதவியேற்கும் என இராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். இன்று முன்னதாக ராணுவ தளபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இடைக்கால அரசின் பதவியேற்பு விழா நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனைக் குழுவில் 15 பேர் இருக்கலாம்” என்றார்.
Discussion about this post