ஈரானில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பிரேக் பழுதானதால் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ் பேலா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தாக்கில் மோதி விபத்துக்குள்ளானது. ஈரானில் இருந்து 70 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று பஞ்சாப் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் லாகூர் அல்லது குர்ரன்வாலாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து கேள்விப்பட்ட பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் கவலையும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post