ஹமாஸ் உயர்மட்ட தளபதி இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்
காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், ஹமாஸ் 251 பணயக்கைதிகளை இஸ்ரேலில் இருந்து காசாவிற்கு கடத்தியது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக் குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் 105 பணயக்கைதிகளை விடுவித்தது. மேலும், தீவிர மீட்பு நடவடிக்கை மூலம் 8 பணயக்கைதிகளை இஸ்ரேல் மீட்டுள்ளது.
எவ்வாறாயினும், 110 க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் இறந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில், ஹமாஸ் ஆயுதக் குழு உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த புதன்கிழமை காலை முதல் மேற்குக் கரையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேற்குக் கரையில் உள்ள ஜெனின், நப்லஸ், டூபஸ் மற்றும் துல்கரிம் ஆகிய நகரங்களில் இஸ்ரேலியப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மேற்குக் கரையில் செயல்படும் பயங்கரவாத குழுக்களை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹமாஸின் மேற்குக் கரையின் ஜெனின் நகரக் கிளையின் பிரதான தளபதி இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸ் ஆயுதக் குழுவின் ஜெனின் நகரக் கிளையின் தளபதியாகச் செயற்பட்டு வந்த வசீம் ஹாஷிம் உட்பட ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 3 பேர் இன்று ஜெனின் நகரின் சப்பாட்டா என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் வாசிம் ஹாஷிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையில், மீதமுள்ள 2 பயங்கரவாதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதக் குழுவின் தளபதி ஜெனின் இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Discussion about this post