சீனாவின் இராணுவத் தளபதி லீ கியோமிங் இஸ்லாமாபாத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பலுசிஸ்தான் விடுதலைப் படையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போது பலுசிஸ்தான் கிளர்ச்சி பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு.
1948 மார்ச் 27 அன்று பலுசிஸ்தானை பாகிஸ்தானுடன் இணைத்தது பலூச் மக்களின் விருப்பத்தால் அல்ல, ராணுவ நிர்ப்பந்தத்தால்.
1948 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை பலுசிஸ்தானில் ஐந்து பெரிய போராட்டங்கள் நடந்துள்ளன. இருப்பினும், ஆகஸ்ட் 25 அன்று, பலுசிஸ்தான் விடுதலை படை காவல் நிலையம், பாதுகாப்புப் பணியாளர்கள், பாலங்கள், ரயில் பாதைகள், வாகனங்கள் போன்றவற்றைத் தாக்கியது.
2006 ஆம் ஆண்டு, பலூச் மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் போராடிய நவாப் அக்பர் ஷாபாஸ் கான், பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டார், அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சீனா திரும்பினார்.
நவாப் அக்பர் ஷாபாஸ் கான் தான் இறக்கும் வரை பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்காக பாகிஸ்தானை எதிர்த்தது மட்டுமின்றி பலுசிஸ்தானின் இயற்கை வளங்களை சுரண்டும் சீன முயற்சிகளுக்கும் தடையாக இருந்தார். அதற்காகவே அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நவாப் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2015 இல் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) சீனா-பாகிஸ்தான் ஒப்பந்தம் மற்றும் 2016 இல் குவாதர் ஆழ்கடல் துறைமுகம் திறக்கப்பட்டது.
பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை சுரண்ட சீன நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. சீன நிறுவனங்கள் உள்ளூர் மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் மதிப்புமிக்க இயற்கை சொத்துக்களை பிரித்தெடுக்கத் தொடங்கியுள்ளன.
பலுசிஸ்தானில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக பலூச் மக்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாக நவாபின் 18வது பிறந்தநாளையொட்டி பலுசிஸ்தான் விடுதலை படை தாக்குதல் நடத்தியது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் சாலை, ரயில் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்த 65 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டமான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) பாதிக்கும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
பலூசிஸ்தானில் பணிபுரியும் பாகிஸ்தானின் பிற பகுதிகளைச் சேர்ந்த பஞ்சாபிகள் மற்றும் சிந்திகள் மீது பலூச் விடுதலை படை தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு எரிசக்தி நிறுவனங்களையும் தாக்கி வருகின்றனர். பலுசிஸ்தானின் வளங்களைச் சுரண்டும் சீன எரிசக்தி நிறுவனங்களும் தாக்கப்படுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் இணைந்து பலூச் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய சீனா, அவர்களை கொல்லும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவும், உதவியும் செய்து வருகிறது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட உய்குர் முஸ்லிம்களை விரட்டியடிக்க சீன அரசு நீண்டகாலமாக அடக்குமுறையை கையாண்டு வருகிறது. இதேபோல் பலூச் மக்களையும் பாகிஸ்தான் ஒடுக்கி வருகிறது. பாகிஸ்தான் சீனாவுடன் சேர்ந்து பலூச் மக்களுக்கு எதிராக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் போரை நடத்தி வருகிறது.
இதனால் பலுசிஸ்தான் விடுதலைப் படையின் எதிர்பாராத தாக்குதலால் இரு நாடுகளும் தற்போது குழப்பத்தில் உள்ளன.
இதே நிலை நீடித்தால் ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் பாகிஸ்தானில் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post