சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறைக்கு எதிராக அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, அதனை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, திமுகவின் பிரமுகரை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது, அவரின் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெயவர்தன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டனர்.

இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், காவல்துறைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இருவரின் புகாரையும் முடித்து வைத்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக, ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல்துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை முறையாக பரிசீலிக்காமல் முடித்துவைத்தது தவறான நடவடிக்கை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன், ஜெயக்குமார் அளித்த புகாரை மீண்டும் விசாரிக்க ஆணைய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளார்.

Facebook Comments Box