‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் மீண்டும் ஒரு முறை வெளியீட்டுத் தேதி தள்ளிப்போயிருக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
முந்தைய அறிவிப்பின்படி, இந்தப் படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகவிருந்தது. எனினும், கிராபிக்ஸ் வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தால், அந்தத் தேதியில் படம் திரைக்கு வராதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படவே இல்லை என்பதால், ஜூன் 12-ஆம் தேதி வெளியீடு சாத்தியமில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, தற்போது படத்தின் விளம்பர வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. புதிய வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டவுடன், விளம்பர பணிகளை மீண்டும் தொடங்க தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது. ஜூன் 27 அல்லது ஜூலை 4-ஆம் தேதி வெளியிட வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்களிலும் படம் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம், அன்றைய தேதிகளில் ‘கண்ணப்பா’ மற்றும் ‘கிங்டம்’ போன்ற படங்கள் வெளியாக இருக்கின்றன.
ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார். இதன் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.