ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணிக்காக நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த கோர நிகழ்வுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பெங்களூருவில் நடைபெற்ற இந்த சோகமான சம்பவம் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. இதனால் மனதளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. இதை கொண்டாடும் வகையில் ஜூன் 4-ஆம் தேதி பெங்களூருவில் வெற்றிப் பேரணி நடத்தப்பட்டது.

அதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு போலீசாரும் ரசிகர்களும் இணைந்து ஆம்புலன்ஸ்களில் கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பவுரிங், வைதேகி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Facebook Comments Box