ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கு விதிக்கப்படும் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வீடு மற்றும் வாகனக் கடன்களின் வட்டி விகிதங்களில் குறைவு ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது. இந்த வட்டி விகித மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருந்து கடன் பெறும் போது செலுத்த வேண்டிய வட்டி விகிதமாகும். கடந்த 5 ஆண்டுகளாக இந்த விகிதம் 6.50% ஆக நிலைத்திருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக மாற்றப்பட்டது. அதன்பின், இரண்டு மாதங்களுக்குள் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு விகிதம் 6% ஆனது.

தற்போது, மீண்டும் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டதன் மூலம், ரெப்போ விகிதம் 5.5% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த விகிதமாகும்.

ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும், இதனால் வீட்டு மற்றும் வாகனக் கடன்களில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box