தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அண்ணாவுக்கு நான் எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் கொண்டிருக்கவில்லை. நான் ஒரு அரசியல்வாதியாகவே அவரிடம் கேள்விகள் எழுப்புகிறேன் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய வீடியோவில் திவ்யா சத்யராஜ் கூறியதாவது:
“விஜய் அண்ணா அவர்கள் மீது எனக்கு தனிப்பட்டவழி எந்த விரோதமும் இல்லை. அரசியலாளராக இருக்கிறதால் நான் அவரிடம் சில கேள்விகளை எழுப்புகிறேன். எதிர்க்கட்சி பெண்கள் மற்றும் அவரது கட்சியிலிருந்து வெளியேறிய சில பெண்கள் மீது ஆசிட் வீசும் வகையிலான மிரட்டல்கள் அவருடைய ஆதரவாளர்களால் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்த பெண்ணின் தாயாரே இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
உங்களுக்கு போலீசார் போன்ற பாதுகாப்பு இருக்கலாம். ஆனால் அந்த பெண்களுக்கு இல்லாமல் இருக்கலாம். நீங்கள் ஒரு கட்சி தலைவராக இருப்பதால், இப்படியான செயல்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பு உங்கள்மேலே இருக்கிறது. சிறந்த அரசியல்வாதி என்பவர் அதிகாரத்திற்கு அல்ல, மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்” என்று திவ்யா சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ், சமூக நலனில் ஈடுபட்டவராகவும், நடிகர் சத்யராஜின் மகளாகவும் அறியப்படுகிறார். ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய திவ்யா, “துணை முதல்வர் உதயநிதி போலி அரசியல்வாதி அல்லர்; ஏசி கேரவன்களிலும், தனியார் விமானங்களிலும் சுற்றும் நபர் அல்லர். அவர் நேர்மையானவர்” எனக் கூறியிருந்தார். இதனையடுத்து, அவர் தம்முடைய பேச்சில் விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாக பலர் சமூக வலைதளங்களில் கூறினர். இதையடுத்து, விஜய் ரசிகர்கள் திவ்யாவை கடுமையாக விமர்சித்ததோடு, பல வகையான எதிர்வினைகளும் உருவானது குறிப்பிடத்தக்கது.