அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரின் நடப்பு சீசன் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கடந்த இரவு கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் குவித்தது. நியூசிலாந்தைச் சேர்ந்த தொடக்க வீரர் ஃபின் ஆலன், வெறும் 51 பந்துகளில் 19 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக 151 ரன்கள் எடுத்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த ஆட்டத்தில் அவர் அடித்த 19 சிக்ஸர்கள், T20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரராக அவரை ஆக்கியது. இதற்கு முந்தைய சாதனையை, 18 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் (2017) மற்றும் சாஹில் சவுகான் (2024) இணைந்து பெற்றிருந்தனர்.
மேலும், ஃபின் ஆலன் 34 பந்துகளில் சதம் அடித்து, MLC டி20 தொடரில் மிகவும் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரராகவும் பதிவானார். இதற்கு முன்னர், நிகோலஸ் பூரன் 2023 இறுதி ஆட்டத்தில் 40 பந்துகளில் சதம் அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக, டி20 போட்டிகளில் இது 2வது மிக வேகமான சதமாகும். முதல் இடத்தில் 2013-ல் ஐபிஎல் தொடரில் 30 பந்துகளில் சதம் அடித்த கிறிஸ் கெய்ல் இருக்கிறார்.
பின்னர் 270 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி, 13.1 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோ அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. வாஷிங்டன் அணியில் ரச்சின் ரவீந்திரா (42), மிட்செல் ஓவன் (39), ஜேக் எட்வர்ட்ஸ் (21) ரன்கள் எடுத்தனர். சான் பிரான்சிஸ்கோ அணிக்கு ஹாரிஸ் ரவூஃப் மற்றும் ஹசன் கான் தலா 3 விக்கெட்டுகளும், கார்மி 2 விக்கெட்டும் எடுத்தனர்.