மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ – புதிய நாவல் எழுதியுள்ளதாக பகிர்வு!

0

தமிழ் திரைப்படங்கள் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ போன்றவற்றில் நடித்த நடிகர் ஸ்ரீ, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களும் வீடியோக்களும் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அவரது மெலிந்த உடலும், நீண்ட தலைமுடியும் அவரின் தோற்றத்தில் பெரும் மாற்றத்தை காட்டியது. இதையடுத்து சமூக வலைதளங்களில், “அவர் தற்போது எங்கே?”, “என்ன நிகழ்ந்தது?” என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்தன.

ஸ்ரீ நடித்த சில படங்களுக்கான சம்பளங்கள் அவருக்கு தரப்படாததாலே அவர் இந்த நிலையில் சென்றடைந்தார் என சில செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதென அவரது குடும்பம் வெளியிட்ட அறிக்கையை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

பல நாட்களாக ஸ்ரீ பற்றி எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் ஒரு புதினம் எழுதியுள்ளார் என்றும், ‘May I Come In’ என பெயரிடப்பட்ட அந்த நாவல் அமேசான் கிண்டில் தளத்தில் வெளியாகியுள்ளது என்றும் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் கவலைக்கிடமான நிலையில் இருந்த ஸ்ரீ, இப்போது மீண்டும் தன்னை நிலைநாட்டி, பழைய நிலைக்குத் திரும்பியிருப்பது குறித்து இணையதள பயனர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here