பாடலாசிரியரின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவான ‘குட் டே’! – தயாரிப்பாளர் தகவல்

0

பிருத்விராஜ் ராமலிங்கம் தனது ‘நியூ மொங் பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘குட் டே’.

இந்த படத்தை அரவிந்தன் இயக்கியுள்ளார். இதில் காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல்ராமமூர்த்தி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியாற்றியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளது. இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்து முடிந்தது.

பிருத்விராஜ் ராமலிங்கம் விழாவில் பேசியதாவது:

“ஒரு படத்தை உருவாக்க நினைத்து இருந்த போது, அது திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது. அப்போது எனது கையில் இருந்தது வெறும் ஆயிரம் ரூபாய் தான். அச்சமயத்தில், என் நண்பர் அரவிந்த் என்னை சந்தித்து ‘படம் பண்ணலாமா?’ என்று கேட்டார். அவருடைய அந்த நம்பிக்கையிலிருந்து ‘குட் டே’ ஆரம்பமானது. நாங்கள் நடத்திய ஒரு உரையாடலே இந்தக் கதைக்கு விதையாக அமைந்தது.

பணம் இல்லாமல், நண்பர்களின் நம்பிக்கையும் உதவியாலேயே இந்த படம் உருவானது. சில நண்பர்கள் நம்பிக்கையுடன் நிதியுதவி செய்தார்கள்; சிலர் சம்பளமின்றியே நடித்தார்கள்.

என் நண்பரும் பாடலாசிரியருமான கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து – குறிப்பாக அவர் கூறிய குடிப்பழக்கம் மற்றும் மனநிலை பற்றிய உண்மையான நிகழ்விலிருந்து – இந்தக் கதையின் மூலக்கரு பிறந்தது. அவருடன் 40 முதல் 50 மணி நேரம் வரை நடத்திய உரையாடலின் அடிப்படையில் இப்படம் உருவானது.

நான் சினிமாவில் நடிகனாகவே வந்தேன். ஆனால், இந்தப் படம் எனது முதல் ஹீரோ வாய்ப்பு. அந்த நம்பிக்கையை எனக்குக் கொடுத்தவர் இயக்குநர் அரவிந்த்,” என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் இயக்குநர்கள் ராஜு முருகன், பாலாஜி தரணிதரன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here