அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலால், தங்களது அணுசக்தி மையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இழப்பீடு வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும், அதற்கான ஏற்பாடு செய்யப்படாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறையீடு செய்யப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் 21ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் ஈடுபட்டன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சூழ்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரான இஸ்மாயில் பாகி, அமெரிக்க தாக்குதலில் தங்களது முக்கிய அணுசக்தி மையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளார். “எங்களது அணுசக்தி மையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன,” எனவும் அவர் கூறினார்.
“இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்க வேண்டும். இல்லையெனில், ஐ.நா.-வில் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இஸ்ரேலுடன் எந்தவித எழுத்துப்பூர்வ போர் நிறைவு ஒப்பந்தமும் இல்லை. இஸ்ரேல் தற்போது தாக்குதலை நிறுத்தியுள்ளது, அதுவே நிலைமை,” என வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே, லெபனானைச் சேர்ந்த ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
முன்னதாக, ஈரானின் அணுசக்தி மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதனை மறுத்து, அவை “முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்து இருந்தார். Maxar Technologies எனும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட உளவுத்துறை செயற்கைக்கோள் புகைப்படங்களில், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மையங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளதைக் காண முடிகின்றது.