பர்தா அணிந்து வீட்டில் நுழைந்த இளைஞர் – இளம் பெண்ணை 5-வது மாடியில் இருந்து தள்ளிக் கொலை செய்த சோக சம்பவம்!
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள அசோக் நகரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 19 வயது நேகா என்பவர், கடந்த திங்கட்கிழமை கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு கடுமையாக காயமடைந்தார். உடனடியாக குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர், சிகிச்சை பலனளிக்காமல் மாயமானது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பர்தா அணிந்த ஒருவர் குறித்த கட்டிடத்துக்குள் நுழைந்து, பின்னர் வெளியேறும் காட்சிகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து நடந்த விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த தவுஃபீக் (26) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் கூறியதாவது: “தவுஃபீக்கும் நேகாவும் காதலித்து வந்தனர். ஆனால் தவுஃபீக், குடும்பத்தினர் தேர்ந்தெடுத்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். இதற்கு நேகா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று, யாரும் தனக்கு அடையாளம் காணக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து அவர் நேகாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கோபத்தில் தவுஃபீக் நேகாவை மேல்மாடியில் இருந்து தள்ளியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.”
இதேவேளை, நேகாவின் தந்தை கூறுகையில், “தவுஃபீக் எங்கள் வீட்டிற்கு கடந்த 3 ஆண்டுகளாக அறிமுகமானவர். அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அவருக்கும் என் மகளுக்கும் காதல் உறவு எதுவும் இல்லை. என் மகள், தவுஃபீக் கையில் ராக்கி கட்டியுள்ளார்” என்றார்.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.