ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்
விரைவுப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர், சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ஜூலை 2ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ள இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, ஆண்டர்சன்-சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றியடைந்தது. தொடரின் இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் உள்ள வீரர்கள்:
பென் ஸ்டோக்ஸ், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் – டெஸ்ட் கம்பேக்
30 வயதான ஆர்ச்சர், கடந்த முறையாக 2021ல் இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். அதன்பின்னர் டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இதுவரை அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 42 விக்கெட்டுகளை பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த முதல் தர போட்டியில் அவர் விளையாடினார். இப்போது மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டு, அவரது பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு வலுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.