‘பிச்சைக்காரன் 3’ படம் எப்போது தொடங்கும்? விஜய் ஆண்டனியின் விளக்கம்!
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மார்கன்’. இந்தப் படத்திற்கான விளம்பர வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விஜய் ஆண்டனி, தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்துப் பயணத்தின் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். ‘மார்கன்’ ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த விளம்பர பயணத்தின் போது, ஒரு பேட்டியில் ‘பிச்சைக்காரன் 3’ பற்றிய கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, “அந்தப் படத்தின் கதையை இப்போது சொல்வதற்கும் தயார். இது, ‘பிச்சைக்காரன்’ பாகம் 1 மற்றும் பாகம் 2-வுடன் ஒப்பிடும்போது முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகும். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை காலத்தில் படம் திரைக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.
சசி இயக்கத்தில் வெளியான முதல் பாகம், விஜய் ஆண்டனியின் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகத்தை அவர் தானே இயக்கி, தயாரித்து, இசையமைத்து, கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘பிச்சைக்காரன் 3’ படத்தையும் அவர் தானே இயக்கி, தயாரித்து, நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.